காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆஃப்கனின் முன்னாள் அரசு அலுவலர்கள் சிலரின் மின்னஞ்சல் கணக்குகளை தாலிபன்கள் முடக்க முயன்றதை அடுத்து, ஆப்கன் அரசின் மின்னஞ்சல் கணக்குகள் சிலவற்றையும், சில அலுவலர்களின் மின்னஞ்சல் கணக்குகளையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இது குறித்து முன்னதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "சில முக்கிய கணக்குகளைப் பாதுப்பதற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பின்மை தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, இந்தத் தற்காலிக நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் முன்னாள் அரசு ஊழியர்கள்
இந்நிலையில், இந்தக் கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாகவும், தாலிபான்களுக்கு துணைபோகும் முன்னாள் அரசு அலுவலர்களைக் கண்டறியவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களுக்கு ஒத்துழைக்காத முன்னாள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் பழிவாங்கப்படும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது மன்னிப்பு அறிவித்த தாலிபான்கள்
முன்னதாக 1996ஆம் ஆண்டு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது இருந்ததைவிட இந்த முறை எளிமையான பிம்பத்தை சித்தரிக்க முயன்று வருகின்றனர். அதன்படி மேற்கத்திய இராணுவத்தினர், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் காவல் துறையில் பணியாற்றியவர்கள் உள்பட அனைவருக்கும் முன்னதாக தாலிபான்கள் பொது மன்னிப்பு அறிவித்தனர்.
எனினும், கள நிலவரம் வேறாக உள்ளதாக தகவல் வெளிவருகின்றன. முன்னதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாள்களில் தாலிபான்கள் ஹெராத்தில் உள்ள பாகிஸ் மாகாணத்தில் காவலர் ஒருவரை கொடூரமான முறையில் தூக்கிலிட்டுக் கொன்றனர். அதேபோல், ஜூலை மாதத்தில், ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தைக் கைப்பற்றிய பின்னர் ஒன்பது ஹசாரா இன மக்களை படுகொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், அரசின் தரவுத்தளங்கள், மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டால், முன்னாள் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோர் குறித்த பல தகவல்களும் வெளியாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தாலிபான்களுடன் பாக். வீரர்கள் இருந்தார்களா - பென்டகன் கூறுவது என்ன?