சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், பாதிப்பின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வரக் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் வலிமையான ஆன்டிபாடி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த ஆராய்ச்சி குழுவில் ஒருவரான மருத்துவர் பரென்டு ஜான் போஷ் கூறுகையில், "2002-03ஆம் ஆண்டுகளில் பரவி வந்த சார்ஸ் வைரஸுக்கு எங்கள் குழு ஆன்டிபாடி கண்டுபிடித்தது. தற்போது கரோனா அழிக்கும் ஆன்டிபாடிகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
வரும் காலங்களில் கரோனா வைரஸ் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த, இந்த ஆன்டிபாடி உதவும்" எனத் தெரிவித்தார்.
உட்ரேச் பல்கலைக்கழகம், எராம்சஸ் மருத்துவ மையம், ஹார்பர் பயோமெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியினாலே இந்த ஆன்டிபாடியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹார்பர் பயோமெட் நிறுவனத்தின் தலைவரும் மருத்துவருமான ஜிங்சோங் வாங் கூறுகையில், "இந்த ஆராய்ச்சி (கரோனாவுக்கு எதிரான போரில்) திருப்புமுனையை ஏற்படுத்த வல்லது. ஆனால், இதுகுறித்து கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. அதன்பிறகே, இதனை மனித உடல்களில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது தெரியவரும்" என்றார்.
இதையும் படிங்க : சி.எஸ்.ஆர். நிதி விவகாரம்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மனு வாபஸ்!