ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா - தலிபான்கள் இடையே பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பேச்சுவார்த்தை அதன் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டார்.
இந்நிலையில் மூன்று மாதங்களாக கிடப்பில் கிடந்த இந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள், "கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா-தலிபான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தன.
சமீபத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க சிறப்புத் தூதர் ஸால்மே கலிஸாத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்று, முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படிங்க : ஐம்பது நாள்களை எட்டிய சிலி போராட்டம் !