பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வ பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டும், காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள கெடுபிடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஸா-இஸ்ரேல் எல்லைக்கோடு அருகே 2018ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எழும் மோதலில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே, காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள், அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் காஸா மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் இரண்டு ஏவுகணைகளை தாங்கள் சுட்டுவீழத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காஸா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாகிச்சூடு தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் சுகாதாரத்துறை அமைச்சர் அல் அன்டாலிசி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காஸா எல்லை அருகே பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 77 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டனர்.