2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 'யெல்லோ வெஸ்ட்’ எனப்படும் எரிபொருள் வரி உயர்வுக்கு எதிராகத் தலைநகர் பாரீஸில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தொடர் முயற்சி மேற்கொண்டார்.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்தப் போராட்டம் தொடர்பாக சுமார் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நோட்ரே டேம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், போராட்டக்காரர்கள் தேவாலயம் அருகே போராட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை கண்டுகொள்ளாமல் போராட்டக்காரர்கள், வீதியில் இறங்கி 23ஆவது வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்டத்தில், காவல் துறையினர், அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்காக 60 ஆயிரம் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தாக்குதல் தொடர்வதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.