உலகெங்கும் உள்ள அரிதான ஆமைகள், புலிகள், கரடிகள் போன்ற விலங்குகளின் கடத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து ஐநாவின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பான UNODC சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் Zoonotic எனப்படும் தொற்றுகள் மிகவும் மோசமானவை. உலகைத் தற்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றும், இந்த வகையிலான Zoonotic நோய்த் தொற்றுதான். இவ்வாறு கடத்தப்படும் விலங்கினங்களில் சுமார் 75 விழுக்காடு விலங்குகள் Zoonotic நோய்த் தொற்று கொண்ட விலங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 1999 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வகையான விலங்குகளும் பறவைகளும் கடத்தப்பட்டுள்ளன. சுமார் 149 நாடுகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் முறை இதுபோன்ற சட்ட விரோத விலங்குகள் கடத்தல் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற கடத்தல் பெரும் குற்றவாளிகளால் நடத்தப்படுகிறது என்றாலும், இதனால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தான் என்றும் ஐநாவின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிரிக்க யானை தந்தங்கள், காண்டாமிருகக் கொம்புகளுக்கான தேவை கள்ளச் சந்தையில் குறைந்துவருகிறது. 2016ஆம் ஆண்டு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நடைபெற்றுவந்த இந்த வர்த்தகம், 2018ஆம் ஆண்டு 230 அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு மட்டுமே நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கடத்தல்காரர்கள் கடத்தல் பொருள்களை வாங்குபவர்களை எளிதில் தொடர்பு கொள்கின்றனர் என்றும், தடைசெய்யப்பட்ட விலங்குகளின் இறைச்சி தற்போது இணையத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவை வீழ்த்திய தாராவி உலகிற்கே முன் மாதிரி' - உலக சுகாதார அமைப்பு பாராட்டு