உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கரோனா தொற்றுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அத்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமலேயே போகும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை(ஆக.3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் பல தடுப்பு மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆனால், இந்த நேரத்தில் கரோனாவை எளிதில் குணமாக்கும் எந்தவொரு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமலேயே போகலாம். தற்போதுள்ள சூழ்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி. இதற்கு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகள் முறையாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.
கரோனா தொற்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரத்திலுள்ள வன விலங்குகளை விற்கும் ஒரு இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவியது. இருப்பினும், இந்த வைரஸ் வூஹானிலுள்ள வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வைரஸின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள தொற் றுநோயியல் மற்றும் விலங்கு சுகாதார வல்லுநர்களை உலக சுகாதார மையம் சீனாவுக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து , "சீனாவுக்குச் சென்ற உலக சுகாதார மையத்தின் வல்லுநர்கள் ஆரம்பக்கட்ட ஆய்வு பணிகளை முடித்துள்ளனர். அடுத்தகட்ட ஆய்வுகளுக்காக சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் சீனா செல்லவுள்ளனர். அவர்கள் வூஹான் நகரில் வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வுகளை விரைவில் தொடங்குவார்கள்" என்றார்.
உலகெங்கும் இதுவரை 1,84,76,313 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6,98,224 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவின் பலவீனம் சாதாரண தண்ணீரா... ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?