கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதுவரை 213 நாடுகளைச் சேர்ந்த 44 லட்சத்து 46 ஆயிரத்து 31 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 442 பேர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து ஐநா மன்றம் மேற்கொண்டு வருகிறது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் உள்ளிட்டவை அனைத்து தரப்பினருக்கும் உரிய நேரத்தில் கிடைக்கும் நோக்கில் முயற்சியில் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக சுகாதார அமைப்பின் அகாடமி மூலமாக இரண்டு கைப்பேசி செயலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. முதல் செயலியானது சுகாதார ஊழியர்களுக்காகவும், இரண்டாவது செயலியானது உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் பொது மக்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 குறித்த வினாக்களுக்கான பதில்களை, வழிகாட்டுதல்களை, நோயாளிகளைப் பராமரிப்பது குறித்த பயிற்சிகளை சுகாதார ஊழியர்கள் பெறலாம் என்று அதன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த செயலி உலகளாவிய சுகாதார ஊழியர்களின் கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. உலகளாவிய சுகாதார ஊழியர்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த செய்திகள், உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள், மருந்து உற்பத்தி, தடுப்பூசிகள் குறித்த அண்மைத் தகவல்கள் அதில் கிடைக்கும்.
இந்த இரண்டு செயலிகளும் ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர் இரண்டிலிருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : உலகளவில் 44 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!