சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இன்று வரை கரோனா பரவல் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், முன்னதாக கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு முறையாக செயல்படுத்தவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு அதிகப்படியான நிதியை அமெரிக்காதான் வழங்குகிறது என்றும், ஆனாலும் அந்த அமைப்பு கரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக நடந்து கொள்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நேற்று (ஆக. 6) செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், "பிளவுபட்ட உலகில் இந்த ஆபத்தான எதிரியை நம்மால் தோற்கடிக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு போன்ற அமைப்புகளால் ஒரு பிரச்னையில் ஆதரவை மட்டுமே அளிக்க முடியும்.
நாடுகளின் பிரதிநிதிகளாக தலைவர்களே உள்ளனர். குறிப்பாக, வலிமையான நாடுகளின் தலைவர்களால்தான் முழு உலகையும் ஒன்றிணைக்க முடியும். எனவே, அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜூலை மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்த முறையான அறிவிப்பை ட்ரம்ப் அரசு வெளியிட்டது. இருப்பினும், வழக்கமான நடைமுறைகளுக்குப் பின், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவால் வெளியேற முடியும்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பணியமர்த்தக் கூடாது' - ட்ரம்ப்பின் புதிய உத்தரவு!