சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை இயல்பு வாழ்கையிலிருந்து நகர்த்தியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மார்ச் மாதத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலியில் கரோனா தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இத்தாலியில் பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதியில்தான் முதல் முதலாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த டிசம்பர் மாதமே இத்தாலியில் கரோனா வைரஸ் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறுகையில், இத்தாலியின் மிலன் மற்றும் துரின் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கரோனா வைரஸின் மரபணுக்கள் இருந்ததற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2019 அக்டோபர் - நவம்பர் இடைப்பட்ட நாட்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கரோனா மரபணு மாதிரிகள் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2020க்கு இடைப்பட்ட நாட்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா மரபணு மாதிரிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தாலியில் கரோனா பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூர்: காங்கிரஸை வீழ்த்திய பாஜக, குஷியில் முதலமைச்சர்!