கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், முக்கியத் திருப்புமுனையாக உலகிலேயே முதல்நாடாக பிரிட்டனில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மார்கரேட் கீனான் என்ற 90 வயது மூதாட்டி, உலகிலேயே முதல் நபராகத் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
80 வயதுக்கு மேலான முதியவர்கள், முதியோர் காப்பகத்தில் உள்ளவர்கள், கரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 21 நாள்களுக்கு பிறகு, இரண்டாம் டோஸ் போடப்படவுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதன் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியிருந்தது. கரோனாவால் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.
பிரிட்டனில் மட்டும் 1.6 மில்லியன் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனாவுக்கு எதிரான போரில் இது முக்கியமான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.