லண்டன்: உருமாறிய கரோனா தொற்று பரவல் பிரிட்டனில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வீரியமிக்க புதிய வகை கரோனா, முந்தைய கரோனாவைக் காட்டிலும் 70 விழுக்காடு அதிவேகமாக பரவக்கூடியது என்றும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்துவரும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பரிந்துரையினை ஏற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனெகா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் முதல் நாடாக பரிசோதனை கட்டத்திலிருந்த ஆக்ஸ்போர்டின் கரோனா தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. மேலும், இது அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாகும்.
இதையும் படிங்க: பிரிட்டனில் ஒரே நாளில் 50,000க்கும் மேல் கரோனா பாதிப்புகள்