ஜெனிவா: அனைத்து உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்வரை உலக சுகாதார அமைப்புக்கு ஓய்வு இல்லை என அதன் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய டெட்ரோஸ் அதனோம், "கரோனா பரவல் தொடங்கி ஓராண்டுக்குள் முனைப்புடன் செயல்பட்டு கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, விஞ்ஞானிகள், வல்லுநர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனாலும் உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்பெற்று, பாதுகாப்பை உறுதி செய்யும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை.
பையோ என்டெக், ஃபைசர் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை அங்கீகரித்து, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே அவசரகால அடிப்படையில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவிட்டன. இங்கு சுகாதார முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
2021ஆம் ஆண்டில் கரோனாவுக்கு எதிரான புதிய சவால்களை நாம் சந்திக்க நேரிடும். பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வல்லுநர்களுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கரோனாவின் தாக்கம், அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை, தடுப்பு மருந்து ஆகியவை குறித்த ஆய்வு பணியைத் தொடங்கியுள்ளது.
உலக நாடுகளும் புதிய வகை கரோனா குறித்து அவரவர் நாடுகளில் பரிசோதனையைத் தொடரவேண்டும். அவ்வாறு உருமாற்றமடைந்த கரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்படும் நாடுகள் தண்டிக்கப்படக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: சவுதியின் பெண் சமூக ஆர்வலருக்கு 6 ஆண்டுகள் சிறை