கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுளளது. இந்நிலையில் இந்தக் கரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் மாதங்களில் கரோனாவால் உளவியல் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால், அதைத் தடுக்க அதிக முதலீடுகள் தேவை என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "சமூகத்திலிருந்து விலகியிருப்பது, வைரஸ் பரவல், குடும்ப உறுப்பினர்களை இழப்பது உள்ளிட்டவற்றுடன் வேலையிழப்பும் இணைந்துள்ளதால் உளவியல் ரீதியாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
பல நாடுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு மனச்சோர்வு, மன அழுத்தும் உள்ளிட்டவற்றின் அறிகுறிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குழந்தைகளும் இந்தக் கரோனாவால் பெரும் ஆபத்தில் உள்ளனர். இதுதவிர வீட்டு வேலைகள் அதிகரித்துள்ளதால் பெண்களுக்கும் மன அழுத்தும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "கோவிட்-19 தொற்றால் நாம் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் மனநலத்தைக் காப்பது முக்கியக் குறிக்கோளாக மாறியுள்ளது. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
பொதுமக்களின் மனநலத்தை நாம் நல்ல நிலையில் வைத்திருக்கவில்லை என்றால், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்படும். மனநல மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள சில நாடுகளில், பொதுமக்களின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதால் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?