கொரோனா வைரஸ் தாக்கம் ஆசியாவைவிட தற்போது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக உள்ளது. ஐரோப்பாதான் தற்போதைய நிலையில் கொரோனா வைரசின் மையப்புள்ளி என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இதுவரை ஆறாயிரத்து 391 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 196 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 63 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
நோயின் தீவிரத்தை உணர்ந்த அந்நாட்டு அரசு அங்கு அவசரநிலையை அறிவித்துள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த நாட்டையும் லாக் டவுன் எனப்படும் முடக்கத்தில் வைத்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மனைவி பிகோனா கோமேசுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் உணவு மற்றும் மருந்துகள் வாங்க மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி எனவும், அதைத்தாண்டி எந்தச் செயல்பாடுகளுக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா: அமெரிக்காவுக்கு தானம் வழங்கும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்