கோவிட் -19 தொற்று சீனாவில் படிப்படியாக குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஐரோப்பா நாடுகளில்தான் இதன் பாதிப்பு அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அதிலும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில்தான் இதன் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.
ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம், வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் சீனாவை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 4.7 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயினில் இதுவரை 85, 195 பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அங்கு 812 பேர் உயிரிழந்ததன்மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7340ஆக உயர்ந்துள்ளது.
100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சீனாவில் கோவிட் -19 தொற்றுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இதன் பாதிப்பும் உயிரிழப்புகளும் பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனால், அதேசமயம் மருத்துவ துறையில் சிறந்த நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவருகின்றனர்.
கோவிட் -19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் |
அமெரிக்கா | 1,42,746 | 2,489 |
இத்தாலி | 97,689 | 10,779 |
ஸ்பெயின் | 85,195 | 7,340 |
சீனா | 81,470 | 3,304 |
ஜெர்மனி | 62,435 | 541 |