ஸ்பெயின் நாட்டில் 17 மாகாணங்கள் உள்ளன. இந்த 17 மாகாணங்களும் தன்னாட்சி அமைப்பாக செயல் படுகின்றன. ஒவ்வொரு தன்னாட்சி அமைப்புக்கும் தனியாக பாராளுமன்றங்கள் உள்ளன. அவை அந்த மாகாணங்களுக்கான சட்டங்களை தனியாக இயற்றுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு கேட்டலோனிய மாகாணத்தில் கேட்டலேனியாவை தனி நாடாக அறிவிப்பதற்கு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், பெரும்பாலானோர் ஆதரித்து வாக்களித்தனர். இதனால் ஸ்பெயினில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இடதுசாரி கட்சிகள் தனி கேட்டலோனியாவுக்கு ஆதரவளித்தும், வலதுசாரிகள் இப்பிரிவினைக்கு எதிராகவும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை வலதுசாரி ஆதரவாளர்கள் பிளாசா டி கோலன் பகுதியில் கூடி பிரம்மாண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயினின் பிரிவினைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரிவினைவாத அரசியல்வாதிகள், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து அதிபர் பெட்ரோ சான்செஸ், "அரசாங்கமானது ஸ்பெயினின் ஒன்றியத்துக்காக வேலை செய்கிறது. ஸ்பெயின் நாட்டு மக்களை ஒன்றுபடுத்துவதோடு, பிரிவினைவாதிகளை சரியான முறையில் எதிர்கொள்ளும்" என்றும் தெரிவித்துள்ளார்.