கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமாக பரவிவருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 29) அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறு ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ஸ்பெயினில் 78 ஆயிரத்து 797 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட 9.1 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், இதுவரை 14 ஆயிரத்து 709 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்றும் அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஸ்பெயின் நாட்டு மக்கள் உணவுப் பொருள்களை வாங்குவது, மருத்துவ சேவைகளை பெறுவது, செல்லப் பிராணிகளை நடைப்பயணம் அழைத்துச் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய செயல்களுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தாலிக்கு அடுத்தப்படியாக கோவிட்-19 வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் திகழ்கிறது.
இதையும் படிங்க: இத்தாலியில் உயிரிழப்பு பத்தாயிரத்தை தாண்டியது