ரஷ்ய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாதிமிர் புதினிடம் ஒப்படைத்தனர். இந்த திடீர் திருப்பம் அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் அரங்கேறியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகளாக ரஷ்யாவை தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் விளாதிமிர் புதினின், அதிபர் பதவிக்காலம் முடிந்த பின்னரும் தனது அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதினின் நெருக்கிய விசுவாசியான ரஷ்ய பிரதமர் மெத்வதேவ், 2008-12 காலகட்டத்தில் அதிபராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2012க்குப்பின் எட்டு ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவர், புதினுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது அதிபரின் பாதுகாப்புக் குழு தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று ரஷ்ய மக்களிடம் சிறப்புரையாற்றிய புதின், ''ரஷ்யாவின் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரும் வகையிலான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு புதினின் அதிபர் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின் அதிபர் பொறுப்புக்கு வருபவருக்கு கடிவாளம் போடும் நோக்கிலேயே இத்தகைய மாற்றங்களை அவர் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பிரதமராக அந்நாட்டின் முக்கிய வரி அதிகாரியான மைக்கல் மிஷூதின் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: சீனா குடைச்சல்... இந்தியாவுக்கு தோள்கொடுத்த ஃபிரான்ஸ்!