- உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லயஷ்கோ நேற்று (பிப். 26) கூறுகையில், ரஷ்யப்படையினர் தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1, 000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ராணுவத்தினரும் உள்ளனரா அல்லது பொதுமக்கள் மட்டுமா என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை. வியாழக்கிழமை (பிப். 24) தொடங்கிய இத்தாக்குதலில் 33 குழந்தைகள் உள்பட 1, 115 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- ரஷ்யப் படையினரின் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். நேற்று வீடியோ வாயிலாக உரையாடிய அவர், கிவ் நகருக்குள் ஊடுருவி ஆட்சியை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரஷ்ய ராணுவத்தினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதாக ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று, கிவ் நகரை கைப்பற்றும்முனைப்பில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
- ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உக்ரைன் நாட்டிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் ஆணையர் அளித்துள்ள நேர்காணலில், இனி வரும் நாள்களில் நிலைமை மேலும் மோசமடைவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
- கிவ் நகரில் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடந்துள்ளது. மேயர் விடாலி கிளிட்ச்கோ ஊரடங்கை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஊரடங்கு நேரத்தில் சாலைகளில் சுற்றும் மக்கள் எதிர் நாட்டின் படையினர் எனக் கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மார்ச் 24ஆம் தேதி ரஷ்ய கால்பந்து அணிக்கும் போலந்து கால்பந்து அணிக்கும் இடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், போலந்து கால்பந்து அணி இந்தப் போட்டியில் பங்கு கொள்ளாது என அறிவித்துள்ளனர். “இனி வார்த்தைகளுக்கு வேலை இல்லை; செயல் மட்டுமே” என போலந்து நாட்டின் கால்பந்து அமைப்பின் தலைவர் செசாரி குலேசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை தங்களை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும்; இந்த தடையானது ஐரோப்பிய நாடுகளின் மேற்கத்திய அரசியலின் இயலாமையை காண்பிப்பதாகவும் ரஷ்யா பாதுகாப்புக்குழுத் தலைவர் டிமிட்ரி மெடெவ்டெவ் கூறியுள்ளார்.
- மேலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனவும் போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டிமிட்ரி கூறியுள்ளார். ரஷ்யாவின் சொத்துக்களை முடக்குவதற்கு முயற்சி செய்தால், மேற்கத்திய நாடுகளின் சொத்துக்களும் முடக்கப்படும் என டிமிட்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பல்கேரியா, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
- ரஷ்யா தனது தாக்குதல் உத்திகளை மாற்றியமைத்துள்ளது என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வான்வழித் தாக்குதலில் ரஷ்யப் படையினர் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
- பன்னாட்டு நிதி நிறுவனம் உக்ரைனுக்கு அனைத்து வகையான உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளது என உக்ரைன் நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தப்பிச் செல்ல விருப்பம் இல்லை; ஆயுதம்தான் வேண்டும் - உக்ரைன் அதிபர்