சிர்கான் (Zircon) எனப்படும் ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை, முதன்முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் இன்று (அக்.04) தெரிவித்துள்ளது.
முன்னதாக கடற்படைக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், சிர்கான் ஏவுகணை ’செவெரோட்வின்ஸ்க்’ எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டு, பேரண்ட்ஸ் (Barents) கடலில் நியமிக்கப்பட்ட போலி இலக்கை சரியாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஏவுகணை குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஒலியின் வேகத்தை விட ஒன்பது மடங்கு வேகத்தில் பயணிக்கு திறனை சிர்கான் கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ரஷ்ய ராணுவத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிர்கானின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்பட உள்ளதாகவும், 2022ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு கடற்படையிடம் சேர்க்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்பு