கரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றிபெற்ற முதல் நாடாக ரஷ்யா தன்னை நேற்று (ஆகஸ்ட் 11) அறிவித்துக் கொண்டது. ரஷ்யாவைச் சேர்ந்த கமேலியா நிறுவனம், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து, தயாரித்த ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார். அவரது மகள் இந்தத் தடுப்பூசியை பரிசோதித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக ரஷ்ய ராணுவத்தினர் பலர் தங்களை சோதனை முயற்சிகளுக்கு உட்படுத்திக் கொண்டதாகவும், அவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மைக்கேல் முரஷ்கோ, இந்தத் தடுப்பூசி குறித்து பேசுகையில், ”இன்னும் இரண்டு வாரங்களில் முதல் கட்டமாக தடுப்பூசிகள் மக்கள்மீது செலுத்தப்படும். மருத்துவப் பணியாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறித்து பரிசிலீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இவ்வாறு தீவிரமாக செயல்பட்டுவரும் போதிலும், தடுப்பூசி தொடர்பாக அந்நாட்டின் கூற்றுகளை உலக நாடுகள் ஐயத்துடனேயே பார்க்கின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு கடனும் இல்லை; எண்ணெய்யும் இல்லை: கைவிரித்த சவூதி அரேபியா