குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா என மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்றாம் கட்டமாக ஐரோப்பிய ஒன்றிய நாடான ஸ்லோவேனியா நேற்று சென்றடைந்த அவர், அந்நாட்டு அதிபர் பஹோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா-ஸ்லோவேனியா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, ஸ்லோவேனியாவுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இது குறித்து ராம்நாத் கோவிந்த பேசுகையில், "எல்லைமீறிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள ஸ்லோவேனியா அதிபர் பஹோருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய சவால் பயங்கரவாதம் என்பதையும், இந்த தீய சக்தியை அழிக்க உலக நாடுகள் ஒன்றுகூடவேண்டியதன் அவசியம் குறித்தும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
ஸ்லோவேனியா-இந்தியா இடையேயான உறவு நூற்றாண்டுகள் பழமையானது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவை விரிவாக்குவதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
ஸ்லோவேனியாவில் உள்ள நவீனத் தொழில்நுட்பம், நிலையான வணிகம், ஆய்வு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்த ஸ்மார்ட் நகரம், ஸ்டாட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, நிதிகளை மீட்டெடுத்தல் ஆகிய திட்டங்கள் ஸ்லோவேனியா நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
ஸ்லோவேனியா நாட்டுக்குச் செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.