ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு முறை தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மேற்கொண்டு பிரிக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவராமல் மற்றொரு வாக்கெடுப்பு நடத்த முடியாதென பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் பிரிட்டன், மார்ச் 29ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடியாதபடி சிக்கல் நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று அந்நாட்டு பிரதமர் தெரெசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலவரம்பை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்போவதாக கூறினார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற 27 நாடுகளும் சம்மதித்தால் மட்டுமே இந்த காலவரம்பை நீட்டிப்பது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் ஆதரவைப்பெற தெரெசா மே ஜூன் இறுதி வரை அனுமதிகோரியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு நடக்கவுள்ளதால் உறுப்பு நாடுகள் மே 23-க்கு மேல் அவகாசம் தர விரும்பவில்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த கால அவகாசத்துக்கான முறையான விளக்கம் அளிக்க பிரிட்டன் தவறும் பட்சத்தில் சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளன. இதனால் பிரட்டனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமடையும் விதமாக பிரிக்ஸிட் எதிர்ப்பாளர்கள் மீண்டுமொரு நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் பங்குபெறும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும் குரல் எழுப்பிவருகின்றனர். இதனால் பிரிக்ஸிட் குழப்பம் தீவிரமடைந்துள்ளது.