உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளோடிமோர் செலென்ஸ்கியை அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற ஐநா மற்றும் அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த உதவியை மறுத்துள்ள அதிபர் செலென்ஸ்கி, நாட்டைவிட்டு வெளியேறாமல் மக்களுடன் நின்று சண்டையிட தயார் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போரானது உக்ரைனில் நடைபெறுவதாகவும், இதற்கான ஆயுதம்தான் எங்களுக்கு தேவையே தவிர நான் தப்பித்து செல்ல விரும்பவில்லை என்றார். மேலும், ரஷ்யா தொடர்ந்து தலைநகர் கிவ்வை தாக்கி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலை எதிர்த்து உலக நாடுகள் ஐநாவில் தீர்மானத்தை முன்மொழிந்து தங்கள் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. இதன் மூலம், உலக நாடுகள் என்னுடன் உள்ளது என தெரிகிறது. உண்மை எங்கள் பக்கம் உள்ளது. எனவே, வெற்றி எங்களுக்கே என அதிபர் செலன்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.
ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 27 நாடுகள் ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன. முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டின் ஆயுதங்கள் உக்ரைன் வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக தகவலின்படி, 14 ரஷ்ய விமானங்கள், எட்டு ஹெலிகாப்டர்கள், 102 டாங்குகள், 536 ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் ரஷ்யா படைகள் தாக்குதல் - போரின் கோர முகம்