போப் பிரான்சிஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகசாகி நகரங்களிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய பிரான்சிஸ், ஆயிரக்கணக்கான மக்களோடு அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேரணி சென்றார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய பிரான்சிஸ், " அணு ஆயுதத் தாக்குதலால் நொடிப்பொழுதியில் அனைத்தும் படுகுழிக்குள் தள்ளப்பட்டன. இதில் மறைந்தவர்களின் அழுகுரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
ஆழமான நம்பிக்கையிலிருந்து நான் மீண்டும் உரைப்பது இதுதான். அணு ஆயுதப் பயன்பாடு மனித குலத்துக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல. எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கக்கூடியதும் தான்.
இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதை, நான் கடமையாகக் கருதினேன். அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழப்பவர்களின் உடலுக்கும், மனதளவில் காயமடைந்தவர்களின் கண்ணியத்துக்கும், வலிமைக்கும் மரியாதை செலுத்த இங்கு வந்துள்ளேன்" என்றார்.
இதனிடையே, நாகசாகி அணு குண்டுத் தாக்குதலில் உயிர்ப் பிழைத்தவர்களுடன் சேர்ந்து கரகோஷம் எழுப்பினார் போப் பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது சக்திமிக்க அணு குண்டுகளை விழச்செய்தது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாகக் கருதப்படுகிறது.