ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 42ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீரின் சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்த பின்னரும் அங்குள்ள நிலைமை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று கோரிக்கைவிடுத்தார். காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளோம் என்றும் கூறினார்.
ஒரு உறுப்பினர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது என்றும் காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி முற்றிலும் தவறானது எனவும் இது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களுக்கு சரியான அடிப்படை தேவைகளை கூட இந்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து பேசிய ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் மிச்செல் பச்லெட், காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தார். மேலும், காஷ்மீர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறுவதை இந்திய அரசு உறுதிபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.