கோவிட்- 19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டம், தற்போது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தால் சோதிக்கப்பட்டுவருகிறது. தற்போது கிடைத்திருக்கிற முடிவுகள் நம்பிக்கை அளிப்பவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் மாகேக் வகை குரங்குகளில் செலுத்தப்பட்ட இந்தத் தடுப்பூசியால், அக்குரங்குகளின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்துள்ளதற்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் படி, செலுத்தப்படும் தடுப்பூசியின் அளவு, வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நுரையீரல் உறுப்புகளுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க போதுமான அளவாக இருக்கிறது என்றும், கரோனா தொற்றுப் பாதித்த பின்னர், தடுப்பூசி வழங்கப்பட்ட ஆறு குரங்குகளில் எவற்றிற்கும் நிமோனியாவை வைரஸ் உருவாக்கவில்லை என்றும், ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் தடுப்பூசியியல் துறையின் பேராசிரியர் சாரா கில்பர்ட், " இந்தத் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி தரவுகளைப் பெற வேண்டும். இந்தத் தடுப்பூசியைப் பரவலாக உபயோகப்படுத்தும் முன் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மனிதர்களை எப்படி இந்தத் தடுப்பூசி பாதுகாக்கிறது என்பதை நாங்கள் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியன் டோஸை இங்கிலாந்து மருத்துவப் பெருநிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால், கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களைத் அணுகி, தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய கென்யா அரசாங்கத்தை அணுகும்.
தொற்று நோய்த் தடுப்புப் பணிகளில் முன்னணியில் செயலாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: 'விஞ்ஞானத்தில் மிஞ்சிய மனிதகுலம்... வைரஸைக் கையாள திணறுகிறது’