லண்டன்: பெண்களின் உரிமை, கல்விக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பிரிட்டனில் அவரது வீட்டில் திடீரென திருமணம் செய்து கொண்டதுடன், இதுகுறித்து தனது ட்விட்டரில், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா (24), பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். 2012ஆம் ஆண்டு பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த மலாலாவை தலிபான்கள் சுட்டனர். அப்போது அவருக்கு 15 வயது தான். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு தேறினார்.
நோபல் பரிசு பெற்ற முதல் சிறுமி
உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து அவருக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
உலகத்திலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா என்ற பெருமையும் கிடைத்தது. தற்போது 24 வயதாகும் மலாலா பிரிட்டனில் உள்ளார். அவர் பிர்கிங்கம் நகரில் உள்ள அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அசீர் என்ற பெயரை தவிர்த்து கணவர் குறித்து வேறு எந்த தகவல்களையும் அவர் பகிரவில்லை.
என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்
இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று எனது வாழ்வின் மகிழ்ச்சியான நாள். அசீரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் திருமண பதிவு செய்து கொண்டோம். பிரிகிங்காமில் எங்கள் குடும்பத்தினர் புடைச்சூழ எங்கள் திருமணம் எளிய முறையில் நடந்தது. உங்களது ஆசியும், வாழ்த்துகளும் தேவை," எனத் தெரிவித்துள்ளார்.
அசீர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளர் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளது. இதனை மலாலா இன்னும் உறுதிபடுத்தவில்லை
எளிமையான முறையில் இஸ்லாமிய முறைப்படி பிரிட்டனில் மலாலாவின் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மலாலா பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: உணவுப் பஞ்சம்: ஆப்கனில் மகள்களை விற்கும் பெற்றோர்!