கரோனா வைரஸ் வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என எவ்வித பேதமுமின்றி உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. பல்வேறு நாடுகள் பெருமளவு உயிரிழப்பு, பொருளாதார இழப்புகளைச் சந்தித்துவருகின்றன.
இந்நிலையில், உலக நாடுகள் பல ஒன்றிணைந்து கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன்படி தங்கள் நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், அதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால், இவை உலகச் சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல.
உலக நாடுகளின் இந்தக் கூட்டுப் பரிசோதனை குறித்து பேசிய சுகாதார அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப முன்னணியாளர் மரியா வான் கெர்கோவ், ”மருந்துகளின் செயல்பாடுகள், நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கும் மருந்துகள், அவற்றின் பாதுகாப்புத் தன்மை, பக்க விளைவுகள் ஆகியவை குறித்து முழுவதுமாக ஆராயப்பட்டு வருகிறது. இந்தச் சோதனைகளுக்காக இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு தளங்களில் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மருந்து பொருள்கள் பயனுள்ளவையா, பாதுகாப்பானதா மக்கள் வசிக்கும் தட்ப வெப்பங்களுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது” என்றார்.
இதுகுறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், ”இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சிகிச்சைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய கால அவகாசங்கள் தேவைப்படும்.
தற்போதுவரை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அளிக்க அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் என ஏதுமில்லை. எனவே, நாம் புதிய சோதனைகளை ஊக்குவிக்கவேண்டும். இதில் கிடைக்கும் சரியான தீர்வுகள் மூலம் புதிய சிகிச்சை முறைகளை அளிக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகள் மும்முரம் - ட்ரம்ப் பாராட்டு