பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
லண்டனில் உள்ள மல்லையாவை சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அவரை நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
மல்லையா மீது மும்பையில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், மும்பைக்கு தான் முதலில் சிபிஐ அலுவலர்கள் அழைத்து வருவார்கள். அவருக்கு மும்பை விமான நிலையத்தில், உடல் நல பரிசோதனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மல்லையா இரவில் மும்பையில் இறங்கினால், முதலில் சிபிஐ அலுவலகத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டியிருக்கும். அவர், பிற்பகுதியில் தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால், மும்பைக்கு பகலில் வந்தால், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.