இதுகுறித்து தி சன் ஆங்கில பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "அது ஒரு இக்கட்டான தருணம். நான் அதை மறுக்கப்போவதில்லை. என் மரணத்தை எப்படி அறிவிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் தானாக வியூகம் வகுத்திருந்தனர் முகக்கவசம் வழியாக எனக்கு லிட்டர் லிட்டராக ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
என்னைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்கிரீன்கள் ஓடும் இண்டிகேட்டர்கள் சரியான பாதையில் செல்லவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இதிலிருந்து நான் எப்படி பிழைக்கப்போகிறேன் ? என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
மருத்துவமனையில் என்னை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். நான் எப்படி உயிர் பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை. வார்த்தைகளால் விளக்க முடியாது.." என மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 10 நாட்கள் கழித்து லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாளே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
பின்னர், கடும் போராட்டத்துக்கும் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். வீடு திரும்பி 17 நாட்கள் கழித்து (ஏப்.29) அவரது காதலி கேரி சைமண்ட்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், பிரதமர் போரிஸ் ஜான்சன், நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க : 'மகிழ்ச்சி', கிம் குறித்து ட்ரம்ப்!