ஐரோப்பிய நாடான பாரிஸ் தலைநகர் பாரிஸின் மத்தியில் அமைந்துள்ளது நார்தடாம் தேவாலயம். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமாகவும், பிரபல சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில், நேற்று மாலை (உள்ளூர் நேரம்) நார்தடாம் தேவாலயத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீ மளமளவெனப் பரவியதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவாலயத்தின் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, அதிவேகமாகப் பரவிவரும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். எனினும், எதிர்பாராத விதமாகத் தேவாலயத்தின் பிரதான மேற்கூரை தீக்கிறைக்காகி பலத்த சத்தத்துடன் இடிந்துவிழுந்தது.
புகை மண்டலமாய் காட்சியளித்த நார்தடாம் தேவாலயத்தைக் கண்டு அதிர்ந்துபோன அந்நகர மக்கள் வீதிகளில் திரளாக நின்று கூக்குரலிட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களின் பலமணி நேரப் போராட்டத்தை அடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரேன், ’நார்தடாமில் ஏற்பட்டுள்ள தீ விபத்து, பிரான்ஸ் மக்களிடையே பெரும் துக்கமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர் மற்றும் பிரென்ச் மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்துவருகின்றனர்.