பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சிறார் பாலியல் வன்கொடுமை குறித்து அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சம்பவம் குறித்து ஜான் மார்க் சாவே என்பவர் தலைமையில் தனிநபர் ஆணையம் புலனாய்வு விசாரணை நடத்தி இரண்டாயிரத்து 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் மூன்று லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள், தேவாலய ஊழியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக ஆணையத்தின் அறிக்கை பகீர் தகவலை கூறியுள்ளது.
இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் 80 விழுக்காடு பேர் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஆய்விற்காக சுமார் இரண்டரை ஆண்டுகள் செலவிட்டதாகவும், சுமார் 6,500க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களை இதுவரை பெற்றுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக பிரான்ஸ் பிஷப்புகள் குழு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும், இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குழு கூறியுள்ளது.
இதையும் படிங்க: 2021 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற மூவர்