பிரான்ஸ் நாட்டிலுள்ள நைஸ் என்ற நகரிலுள்ள தேவாலயத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று திடீரென்று தன் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அருகில் இருப்பவர்களைத் தாக்கத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ் என்றும் உறுதியாக நிற்கும் என்று தெரிவித்தார்.
இத்தாக்குதலுக்குப் பின் முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில், "கோபமடைந்த ஒரு இஸ்லாமியரின் செயலுக்கு நீங்கள் அனைத்து இஸ்லாமியர்களையும் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். எனவே, பிரெஞ்சுக்காரர்களைத் தண்டிக்க இஸ்லாமியர்களுக்கு உரிமை உண்டு" என்று பதிவிட்டிருந்தார்.
மகாதீர் முகமதின் இந்தக் கருத்திற்கு பிரான்ஸ் அரசின் பல அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் டிஜிட்டல் விவகார அமைச்சர் செட்ரிக் ஓ, "வன்முறையைத் தூண்டும்வகையில் கருத்துகளைப் பதிவிட்ட முகமதின் ட்விட்டர் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும். இல்லையென்றால், இந்தக் கொலைகளுக்கு ட்விட்டரும் துணைபோனதுபோல ஆகிவிடும்" என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட ட்வீட் மட்டும் தற்போது ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரான்ஸ் தேவாலயம் அருகே தாக்குதல் நடத்தியது யார்? - வெளியான பரபரப்பு தகவல்கள்