கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளில் விரைவாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த பிரான்ஸ் இந்த ஊரடங்கால் பெரும் இழப்பைச் சந்தித்தது. காதலர்களின் தலைநகரான பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரமும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கரோனா தாக்கம் குறைந்துவருவதால், சுற்றுலாத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவகங்களையும் விடுதிகளையும் முன்கூட்டியே திறக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஈபிள் கோபுரம் அதிக நாள்கள் இந்த கரோனா காரணமாகவே மூடப்பட்டது.
ஈபிள் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டு சில நாள்களுக்கு குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும். மக்கள் லிஃப்ட்களை பயன்படுத்த அனுமதியில்லை என்றும் முதல் மற்றும் இரண்டாம் தளம் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈபிள் கோபுர நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "மாஸ்க் அணிந்துவரும் 11 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அனுமதியளிக்கப்படும். முதல் சில வாரங்களுக்கு குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். இருப்பினும், ஆக்ஸ்ட் மாத இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பழையபடி திரும்பும் என்று நம்புகிறோம்" என்றார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈபிள் கோபுரத்தில் மக்கள் ஒன்றுகூடும் அனைத்து இடங்களும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படவுள்ள புதிய கோவிட்-19 தடுப்பு மருந்து!