மகளிர் நாளையொட்டி சர்வதேச உணவு நிறுவனமான பர்கர் கிங் (மார்ச் 8) ட்வீட் ஒன்றினைப் பதிவிட்டது. அதில், ‘பெண்கள் சமையலறைக்குச் சொந்தமானவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
பெண்களை சமையலறைக்குள் சுருக்கிக்காட்டும் அந்த ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அத்தோடு ’ஆள விடுங்கடா சாமி’ என அந்நிறுவனம் சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த ட்வீட்களில் தாளித்துவிட்டனர் நெட்டிசன்கள்.
இதையடுத்து, தங்கள் பதிவின் சாராம்சத்தை நெட்டிசன்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்த பர்கர் கிங், அந்த ட்வீட்டையும் நீக்கியது.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், ’முந்தைய ட்வீட்டில் தவறான கருத்துகள் இருந்தது எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எவ்வித தவறான எண்ணத்தையும் வாடிக்கையாளர்கள் மனத்தில் விதைக்க நாங்கள் விரும்பவில்லை’ என்றிருந்தது.
இது தவிர பர்கர் கிங் நிறுவனம் நேற்று (மார்ச் 8) வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விளம்பரத்திலும் ‘Women belong in the kitchen' எனக் குறிப்பிட்டுள்ளது. சமயலறைகள் எப்படி இருந்தாலும், அதற்குச் சொந்தமானவர்கள் பெண்கள்தான் என அதில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
மேலும், 'இந்நாள்களில் சமையலறைகளில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று யூகிக்க முடியுமா? அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் வெறும் 24 விழுக்காடுதான் பெண்கள் இருக்கின்றனர்’ என்பதுபோல அந்த விளம்பரம் தொடர்கிறது.
பர்கர் கிங் நிறுவனம் இந்த விளம்பரத்தின் மூலம் பெண் சமையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்புவிடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், பெண்களை சமையலறைகளுக்குள் அடக்கிப்போடும் விளம்பரம் இது எனப் பல்வேறு தரப்பினர் கொதித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்கள் அரசியலிலும் அதிகாரமிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் - சீமான்