அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா உள்பட இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கரோனா பரவலையும் பொருட்படுத்தாமல், நேற்று மத்திய லண்டன் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைக் கண்டித்து பேரணியாகச் சென்றனர்.
இதுகுறித்து காவல் உயர் அலுவலர் ஜோ எட்வர்ட்ஸ் கூறுகையில், "மக்களின் குரல் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. அலுவலர்கள் மிகவும் பொறுமையாக போராட்டத்தைக் கையாண்டனர். இருப்பினும், சில சமூகவிரோதிகள், போராட்டத்திற்குள் நுழைந்துவிட்டனர். கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற போராட்டத்தில் 23 காவலர்கள் காயமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.