உலகெங்கும் பல லட்சம் பேரை பலி வாங்கியுள்ள கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. கோவிட்-19 தொற்றுக்கு தடுப்புமருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போட்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தடுப்புமருந்தின் முடிவுகள் இதுவரை சிறப்பாக உள்ளதால், விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கரோனா தடுப்புமருந்தை எடுத்துக்கொண்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனைப் போலவே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றுவரும் மருத்துவப் பரிசோதனைகளும் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தடுப்புமருந்து குறித்த தரவுகளை மறுஆய்வு செய்ய ஏதுவாக தற்போது மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்ட நபருக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவிதத் தகவல்களையும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் வெளியிடவில்லை.
இந்நிலையில், இச்சம்பவம் தடுப்புமருந்து உற்பத்தியை தாமதப்படுத்தாமலிருக்க ஏதுவாக, தரவுகளை மறுஆய்வு செய்யும் பணிகளை விரைவாக முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்புமருந்து பரிசோதனையின்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்படுவது வழக்கமான நிகழ்வுதான் என்றபோதிலும், கரோனா தடுப்புமருந்தின் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.
கோவிட்-19 தொற்று காரணமாக உலகெங்கும் இதுவரை இரண்டு 77 லட்சத்து 40 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 லட்சத்து, ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டாக கரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ளும் ஈரான், ரஷ்யா!