விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, 2012ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்தில் அகதியாக இருந்துவந்தார். இந்நிலையில், அவர் தூதரகத்தின் விதிகளை மீறியதாக கூறி ஏப்ரல் மாதம் அவரை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் உள்ள பாலியல் வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்பட்டன.
மேலும், லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிணை விதிகளை மீறியதாக அவருக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அமெரிக்க அரசு ஜுலியன் அசாஞ்சேவை தொடர்ந்து நாடு கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஆவணங்களை திருடிய வழக்கில் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அசாஞ்சே வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஜுலியன் அசாஞ்சேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவரால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக முடியவில்லை என்று அசாஞ்சே தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அசாஞ்சேசிறையில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி அடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜுன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அந்த விசாரணை பெல்மார்ஷ் சிறை வளாகத்தில் நடத்தினால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.