இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெருசலமில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வீட்டின் முன்பு நேற்று குவிந்தனர். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நெதன்யாகுவை பதவி விலகக் கோரி கடந்த ஏழு மாத காலமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி, கரோனா பெருந்தொற்றை முறையாக கையாளவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதில் நெதன்யாகு தலையீடு செய்ததாக போராட்டத்தில் சிலர் குற்றச்சாட்டு எழுப்பினர். பொம்மை நீர்மூழ்கிக் கப்பல்களை சுமந்து விநோத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். குற்ற அமைச்சர் என்ற வாசகம் பொருந்திய வைரஸ் வடிவிலான பெரிய பொம்மையை கொண்டு போராட்டம் மேற்கொண்டனர்.
நெதன்யாகு மீது அந்நாட்டில் பெரு முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன், அவருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட பல முன்னணி ஊடகங்களுக்கு அவர் பரிசுகளைக் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதும் அம்பலமானது.
இதனையடுத்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்தக்கோரி இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்றுவரும் இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.