உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனா, ஈரானில் ஆகிய நாடுகளில் மட்டும் தீவிரமாக இருந்த வைரஸ் தொற்று தற்போது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்குப் பரவியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நோய் தீவிரம் கடந்த 10 நாள்களில் வேகமாகப் பரவியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் 24 ஆயிரத்து 873 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும், கரோனா காரணமான உயிரிழப்பு 94ஆக உள்ளது. அந்நாட்டில் நோய் பரவலைத் தடுக்க அதிபர் ஏஞ்சலா மெர்கல் போர்க்கால அடிப்படையில் பணி செய்துவரும் நிலையில், அவருக்கு கரோனா தொற்று அபாயம் எழுந்துள்ளது.
அதிபர் ஏஞ்சலா மெர்கலின் மருத்துவருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது ஏஞ்சலா மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வரும் இரண்டு மூன்று நாள்களில் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்போவதாகவும் ஏஞ்சலா மெர்கல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை அந்நாட்டின் துணை அதிபரும் நிதியமைச்சருமான ஒலாஃப் ஷோல்ஸ் அதிபரின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: செய்தித்தாள்களை நிறுத்திவைத்த ஐக்கிய அரபு அமீரகம்