வியன்னா(ஆஸ்திரியா): ஆஸ்திரிய நாட்டிலுள்ள வியன்னா பகுதியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்படவிருந்தது. அதற்கு முன்னதாக மக்கள் அனைவரும் கேளிக்கை விடுதிகளில் திரண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். வியன்னா பகுதியிலுள்ள முக்கிய ஆறு இடங்களில், இந்தச் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலைக் கட்டுப்படுத்த முனைந்த காவல் துறையினரையும் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த காவல் துறையினர் உள்ளிட்ட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் காவல் துறையினரால் கொல்லப்பட்டுள்ளதாக, ஆஸ்திரிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், இந்த தாக்குதல்களை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவோம் எனவும் முக்கிய பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகித்த காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் பொதுப் போக்குவரத்துகளைத் தவிர்க்குமாறும், சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையோ, காணொலிகளையோ பகிரக்கூடாது எனவும் அந்நாட்டு காவல் துறை வலியுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.