சர்வதேச புத்தக நாள் என்றால் என்ன?
இது புத்தக வாசிப்பு, பதிப்பு, எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வில்லியம் சேக்ஸ்பியர், மிகியல் செர்வேண்ட்ஸ், இன்கா கர்சிலசோ டி லா வேகா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளுமைகள் உயிரிழந்தது இந்த தேதியில்தான்.
1995 ஏப்ரல் 23ஆம் தேதிமுதல் சர்வதேச புத்தகம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு ஏற்பாடு செய்தது சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பால் உலக புத்தகத் தலைநகரம் என ஒரு இடம் தேர்வுசெய்யப்படும். இந்தாண்டு அது மலேசிய தலைநகரம் கோலாலம்பூரை தேர்வுசெய்துள்ளது.
சர்வதேச புத்தக நாளின் நோக்கம்
இந்த வேளையில் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் நினைவுகூருவது, வாசிப்பின் அவசியத்தையும் தேவையையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவது ஆகியவை அவசியமானது. அதுவே சமூக பண்பாட்டு முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும். இந்த நாளில் குழந்தைகள், இளைஞர்களின் இலக்கியப் பணிகளுக்கு யுனெஸ்கோவால் பரிசு வழங்கப்படும். அதேசமயம் பதிப்புரிமைச் சட்டம், அறிவாளிகளின் பதிப்புரிமையைக் காப்பதன் அவசியம் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
புத்தக வாசிப்பு தரும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாளாக இது திகழ்கிறது. இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பாலமாக விளங்குவது புத்தகங்கள் என்ற உண்மையை உலகம் அங்கீகரிக்கும் நாளான இதை உலகெங்கும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்நாளில் புத்தகம் சார்ந்த மூன்று முக்கியப் பிரிவுகளை யுனெஸ்கோ முன்னிலைப்படுத்துகிறது. அவை பதிப்புத் துறை, புத்தக விற்பனைத் துறை மற்றும் நூலகங்கள் ஆகும். இவற்றின் மூலம்தான் உலக புத்தகத் தலைநகரம் தேர்வு செய்யப்படுகிறது.
பதிப்புரிமை என்றால் என்ன?
அறிவாளிகளின் படைப்பைக் காப்பதற்கான சட்டப்பூர்வ வழிதான் பதிப்புரிமை. எழுத்தாளர் அல்லது படைப்பாளியின் உண்மையான பணிக்கு உரிய மதிப்பை அளிக்கிறது பதிப்புரிமை. ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை இந்த உரிமை நீட்டிக்கும்.
யுனெஸ்கோவின் கொண்டாட்டம்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப யுனெஸ்கோ அமைப்பு மக்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்கள், நூலகப் பொறுப்பாளர்கள் உள்பட படைப்பாளிகளையும் புத்தகங்களையும் கொண்டாடும் லட்சக்கணக்கானோர் ஒன்றிணையும் நாளாக சர்வதேச புத்தக நாள் இருக்கிறது.
கோவிட் 19 தொற்றால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது உலக நாடுகளில் உள்ள 90 விழுக்காடு மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிஜிட்டல் நூலகங்களின் உதவியால் அவர்கள் பயின்றுவருகின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகக் கற்பிக்கும் முறையை பின்பற்றுகின்றன. தொலைதூரக் கல்விக்கு யுனெஸ்கோ தொடங்கியுள்ள உலக கல்வி கூட்டணி உதவியாக உள்ளது.
மக்கள் தடையின்றி வாசிக்கவும் கற்கவும் டிஜிட்டல் நூலகங்கள், பதிப்பகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. ஆன்லைனில் தரமான இலவச நூல்கள், முக்கிய படைப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஐஐடி காரக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய தேசிய டிஜிட்டல் நூலகத்தில் (young National Digital Library of India) நான்கு கோடிக்கும் அதிகமான இ-புத்தகங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கற்றல் தளமாக இது விளங்கிறது. நாள்தோறும் கிட்டத்தட்ட 30 லட்சம் பயன்பாட்டாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் ஒருங்கமைப்பு என்றால் என்ன?
நிலையான நகர்ப்புற முன்னேற்றத்தில் படைப்பாற்றலின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் நகரங்களை ஒருங்கிணைப்பதே யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் ஒருங்கமைப்பு. 246 நகரங்களைக் கொண்ட இந்த ஒருங்கமைப்பு, முன்னேற்றத் திட்டங்களில் படைப்பாற்றலையும் பண்பாட்டு நிறுவனங்களையும் வைத்து ஒரே நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறது.
இந்த ஒருங்கமைப்பு ஏழு படைப்பாற்றல் துறைகளை முக்கியமானதாகக் கருதுகிறது. அவை நாட்டுப்புற கலைகள், ஊடகம், திரைப்படம், வடிவமைப்பு, சமையல், இலக்கியம், இசை ஆகும். இதன்மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் மனிதகுலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் நோக்கம்.
உலக புத்தகத் தலைநகர் 2020
2018 செப்டம்பர் 19 அன்று யுனெஸ்கோவின் இயக்குநர் ஆடுரே அசோலே, 2020ஆம் ஆண்டுக்கான உலக புத்தகத் தலைநகராக மலேசிய தலைநகர் கோலாலம்பூரைத் தேர்வுசெய்தார். உலக புத்தகத் தலைநகரின் ஆலோசனைக் குழு, சர்வதேச பதிப்பகங்களின் அமைப்பு, புத்தக சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு, யுனெஸ்கோ ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில் கோலாலம்பூர் தேர்வுசெய்யப்பட்டது.
இந்த சூழலில் ஏன் வாசிப்பு மிக முக்கியம்
கரோனா தொற்றால் உலகெங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, மக்கள் மிகக் குறுகிய நேரத்தைதான் வெளியில் செலவிட முடியும், தனிமைப்படுத்தப்படுதலின் துயரிலிருந்து மீள புத்தகங்கள் உதவுகின்றன. நமது பார்வையையும் படைப்பாற்றலையும் அது விரிவடையச் செய்கிறது. வாசிப்பின் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்த இந்நாள் (ஏப்ரல் 23) முக்கியமான நாளாக உள்ளது.