கோவிட்-19 தொற்று முதலில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 5,60,612 பேர் இந்தத் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,48,241 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடக்கம் முதலே கோவிட்-19 தொற்று வூஹானிலுள்ள கிருமியியல் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற செய்திகளும் உலா வரத் தொடங்கின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோரும் சீனாவைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 தொற்று எதன் மூலம் பரவியது என்பதை அடையாளம் காண்பதில் சீனா சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரக்கால நிலைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், "கரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுகளை நடத்துவது குறித்து சீனாவில் உள்ள எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம்.
சீன அரசும் உலகெங்கிலும் உள்ள மற்ற அரசுகளும் இந்த வைரசின் தோற்றம் குறித்தும் இந்த வைரஸ் எவ்வாறு மனிதர்களுக்குப் பரவியது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளன. இந்த விவகாரத்தில் சீனா காட்டிவரும் ஆர்வமும் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கையும் பாராட்டத்தக்கது.
தோற்றம் குறித்து நடைபெறும் இந்த ஆய்வுப் பணி எப்போது நிறைவடையும் என்று உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும் இந்த ஆய்வை விரைவில் முடிக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
கரோனா தோற்றம் குறித்து நடைபெறும் ஆய்வுகளில் சர்வதேச நிறுவனங்களுடன் சீன நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுகின்றன. இது ஒரு நல்ல அறிகுறி" என்றார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, கோவிட்-19 தொற்றின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள முயலும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களைச் சீனா வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?'