ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளப் போகிறார். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் பொதுக்குழு கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பப் போவதாக தகவல் முன்பே வெளியாகியிருந்தது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியா காஷ்மீரை பிரித்தது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு உரிமையை நீக்கியபோதே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனை, சர்வதேச அளவில் எடுத்துச் செல்வோம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்த ஐநா சபையின் இந்திய தூதர் சையத் அக்பருதீன், பொதுக்குழு கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் எனக் கூறியுள்ளார். ஐநா கருத்தரங்கில் பேசிய அவர், “காஷ்மீர் போன்ற மாநிலம் உங்களது நாட்டில் இருந்தால் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?. ஒவ்வொரு நாடும் உலகளாவிய தளங்களை எப்படி அணுக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பாதையை நாங்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம். சிலருக்கு(பாகிஸ்தான்) இது புரிந்தாலும் கூட புரியாதது போல நடித்து பிரச்னை எழுப்பலாம். அவர்களுக்கு நாங்கள் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாங்கள் தலைநிமிர்வோம், நீங்கள் தலைகுனிவீர்கள்” என காட்டமாக கூறினார்.
மேலும் அவர், ”கடந்த காலங்களிலிருந்து பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை கண்கூடாக நாங்கள் பார்த்து வருகிறோம். தற்போது பொதுக்குழு கூட்டத்தில் வெறுப்பை உமிழ காத்திருக்கிறார்கள். விஷ பேனா நீண்ட நாட்கள் வேலை செய்யாது” எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் செயல்படுங்கள்: உலக சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கும் சையத் அக்பருதின்