துபாய்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியாகவும், முன்னாள் அதிபராகவும் இருந்தவர், பர்வேஸ் முஷாரஃப். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை நடத்திய இவர் மீது தற்போது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, அவர் 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முஷாரஃப் அதன்பின் பாகிஸ்தான் திரும்பவில்லை. மேலும், இவர் 1999இல் இந்தியா - பாகிஸ்தான் நடத்திய கார்கில் போரின்போது, அந்நாட்டின் ராணுவத் தளபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், மான் கறி உட்கொண்ட வழக்கில் கைதாகி சிறைசென்றவரும், பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் துபாயில் முஷாரஃபை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முஷாரஃப் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தில், சஞ்சய் தத் யாரையோ கைகாட்டி பேசுவது போன்றுள்ளது. மேலும், இந்தப் புகைப்படம் எப்போது, எப்படி எடுக்கப்பட்டது என்று உறுதிசெய்யப்படாத நிலையில், இச்சந்திப்பு எதேச்சையாக நடந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, சஞ்சய் தத், பினோய் காந்தி இயக்கத்தில் தயாராகி வரும் 'குத்சாடி' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும், சஞ்சய் தத் நடித்துள்ள 'கே.ஜி.எஃப்-2' திரைப்படமும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.