சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகையே சூறையாடி வருகிறது. இந்த நோய் உலகளவில் இதுவரை முப்பது கோடிக்கும் அதிகமானோரை பாதித்து, இரண்டு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில், கரோனாவை வீழ்த்த 24 மணி நேரமும் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் கடவுளுக்குச் சமமாகப் பார்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவப் பணியாளர்கள், போக்குவரத்து துறையினரைக் கௌரவிக்கும் பொருட்டு அந்நாடு முழுவதும் இன்று மாலை ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
கரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 60 ஆயிரம் பவுண்டு ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.
அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS)ஐ சேர்ந்த 82 மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த NHS உயர் அலுவலர் பிரேரானா இசாசர் கூறுகையில், "இந்த வைரஸ் பேரிடரிலிருந்து பிரிட்டன் மீண்டவுடன், உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களை நினைவு கூறும் நிகழ்ச்சியை நடத்துவது குறித்து NHS ஆலோசித்து வருகிறது" என்றார்.
பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 348 பேர் கரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : உயிர் காக்கும் மருந்தை டெலிவரி செய்த தென்னக ரயில்வே