சிறு வீடியோக்களை எடுக்க உதவும் டிக்டாக் செயலி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் ByteDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இச்செயலி சீனாவில் தனது சேவையை வழங்குவதில்லை. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பகுதியில் மட்டுமே டிக்டாக் தனது சேவையை வழங்கிவருகிறது.
சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டின் உளவுத்துறைக்குத் தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்பதால் டிக்டாக் போன்ற சீனச் செயலிகளைப் பயன்படுத்தும் பயனாளர்களின் தனியுரிமைக்கு ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், டிக்டாக் நிறுவனத்தின் எந்தவொரு தகவலும் சீனாவில் சேமிக்கப்படுவதில்லை என்றும், சீன அரசு இதுவரை தங்களிடம் எவ்வித தகவல்களையும் கேட்டதில்லை என்றும் டிக்டாக் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சீனா சமீபத்தில் சர்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ஹாங்காங் பகுதியில் டிக்டாக் தனது சேவையை அடுத்த சில நாள்களில் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் பகுதியை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசென்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியார்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வங்கிகளின் வாராக்கடன் சிக்கல்' குறித்து புத்தகம் எழுதும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்!