காபூல்: தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், ஆப்கான் அரசுக்கு ஆதரவாக பணியாற்றியவர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனிடையே, அமெரிக்கா தனக்காக பணியாற்றிய கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது.
மேலும், அமெரிக்கா தனது தூதரக அலுவலகத்தை காபூல் விமான நிலையத்துக்கு மாற்றியது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ விமானத்தில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் நடுவானிலிருந்து விழுந்து உயிரிழந்தனர்.
கடந்த நான்கு நாள்களாக விமான நிலையத்தில், மக்கள் அதிகமாக குழுமியிருக்கும் நிலையில், நேற்று தாலிபான்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆவணம் இல்லாதவர்கள் வெளியேறுங்கள்
அதில், பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறும், பயண ஆவணங்கள் வைத்திருப்போரை பாதுகாப்பாக செல்ல உதவுவதாகவும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, தாலிபான்களின் உதவியுடன், இந்திய தூதர் உள்பட 150 பேர் காபூல் விமான நிலையம் வந்து இந்தியா திரும்பினர்.
"ஆவணங்கள் இல்லாமல் விமான நிலையம் வந்தாலும், அவர்களை விமானத்தில் ஏற்றிக்கொள்கிறார்கள்" என்று தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அதை நம்பியே தாங்கள் விமான நிலையம் வந்ததாகவும் ஆப்கானியர்கள் சிலர் அங்குள்ள செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி கடந்த ஞாயிறு அன்று நாட்டைவிட்டு தப்பியோடியதால், விமான நிலையத்தில் மக்கள் கூடுவதை தடுக்க முடியாமல் போனது. நாட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கான விமானங்கள் ஆகஸ்ட் இறுதிவரை இயக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்